Sunday, May 5, 2013

ஒரு பயணக் கதை!

ஓடி ஓய்ந்துவிட்டேன்
நரை மூப்பெடுத்த நான்!
மகளின் மறுவீட்டு அழைப்பிற்கு
ஏற்பாடு செய்ய வேண்டும்!
ஓய்ந்து போர்வைக்குள் சுருண்டிருக்கும் நான்!
மகன் கால் பிடிக்க
என்னவரின் அணைப்புக்குள்
வலிக்கும் நெஞ்சோடு அடைக்கலமானேன்!
நித்திரை வேகத்தில்
அப்பா கடற்கரைக்கு அழைத்து போயிருந்தார் மழலை என்னை!
அலையோடு கால் நனைத்து அம்மாவின் கைப்பிடித்து ஆழ்கடலுக்குள் நடந்தேன்!
அணைத்த கடல் தன்னுள் இழுத்தது என்னை
மறுக்கவில்லை நான்!
ஆழியில் முக்குளித்து முத்தெடுக்கத்தான் போனேனோ,
வண்ணமீன் என்னைத் தழுவ முழுகி சிப்பிகளைத்தான் எடுத்தேன்
முத்து கிடைக்கவேயில்லை!
முத்தை பெற்றுத்தர அம்மாவும் அப்பாவும் தன்னோடு இழுத்தார்கள் என்னை!
நீந்த நீந்த மிதக்கத்தொடங்கிவிட்டேன்!
வயதும் ஏறியது,
கரையில் ஒண்டியாய் நின்ற என்னவரோடு
பிள்ளைகளும் ஒவ்வொருவராய் வந்து நிற்க
செத்துப் போன அப்பாவும் அம்மாவும்
தூரமிழுத்துச்செல்ல
திமிறினேன்
மூச்சடைத்தது
வலி மிகுந்தது
காது செவிடானது
கண் மங்கியது
தொண்டை கசந்தது
நா உலர்ந்தது!
மூர்சசையானேன்!
பொழுது புலர்ந்தது!
பிறந்த மேனியாய் நான் கிடக்க பெண் கூட்டம் என்னை நீராட்டியது!
ஏதோ பெட்டிக்குள் அடைத்த என் பூமேனி எட்டுக்காலெடுத்து நடந்தது!
மகன் மண் தூக்கிப்போட்டான் என் மேல்!
இப்போது என்னவர்!
மகளைக் காணோம்!
மூச்சு திணறத் திணற என்னைத் தன்னோடு இழுத்துப்போன அப்பாவும் அம்மாவும் மட்டும் எனக்குத் துணையாய்!
என்னைப் பார்க்கவேயில்லை கூட்டத்தில் யாரும்!
மண்ணறைக்குள் என் மெய்,
மகளை மறுவீட்டுக்கு அழைக்க வேண்டும்....

1 comment:

  1. படிக்க ரொம்ப சோகமாக உள்ளது. ஆனால் நன்றாக எழுதியுள்ளீர்கள்!

    amas32

    ReplyDelete