Sunday, June 2, 2013

தலைக்கு மேல் காற்று!

உலகம் எப்படிப்பட்டது என்பதை ஆறே மாதத்தில் கற்றுக்கொடுத்துவிட்டது ட்விட்டர். நேரத்தை கடத்தலாம் என வருவோர்க்கு எப்படியோ தெரியாது, தனியானதொரு அடையாளத்தை உருவாக்கிக்கொள்ள நினைப்போருக்கு ட்விட்டர் வாழ்க்கையையும், உலகையும் எளிதாக கையடக்கமாய் காட்டி விடுகிறது.

இப்போதும் எனக்கு ட்விட்டர் பாசமான உறவுகளை அள்ளித்தந்த பூமிதான்! கொஞ்சம் வித்தியாசமாய்!

இந்த ரத்தபூமிக்குள் ஒரு வண்ணத்துபூச்சி, பறவையொன்றாய் முதிர்ந்திருக்கிறேன் அவ்வளவே!

என்னை யோசிக்கத்தூண்டியது, கொஞ்சம் முதிர்வைத் தந்தது, நிறைய பொறுமையை, பொதுவெளியில் எதைப்பேசுவது என்பதை, நம்பகத்தன்மையை, முடிவெடுக்கும் திறனை என எல்லாவற்றிலும் யோசிக்கத்தூண்டியது ட்விட்டர்தான்! எத்துனைப் பெரிய பிரச்சினையிலும் மனதை லேசாக்கி விடுவதை ஒரு நாலே கீச்சில் செய்துவிடுகிறார்கள் இங்கே!

நன்றி அனைவருக்கும்!
                          ___________________________________________________

தட்டான் தேடிப் பிடிக்கவேண்டிய வயதிலேயே அப்பாவின் ட்ரான்ஸ்பர்களால் நட்புகளை தக்கவைத்துக்கொள்ள முடியவில்லை எனக்கு, வாடகை வீட்டம்மாவின் அதிகார பிரயோகங்களால் தெருவுக்குள் புழுதி பறக்க காற்றிலாடியதும் இல்லை நான். டாம் அண்ட் ஜெர்ரியும் சன் ம்யூசிக்குமாய் கழிந்த என் பள்ளிப் பருவம் என்னை மழலையாகவே தக்கவைத்து கொண்டது! கொஞ்சம் புத்தகம் மட்டும் இல்லையென்றால் நான் சந்தோஷ் சுப்ரமணியம் ஜெனிலியாதான்!

கல்லூரிக் காலத்தில் என்னை சுற்றி ஒரு நட்புக் கூட்டம், சிரித்து, அழுது, தீர்ப்பு சொல்லச்சொல்லி, திட்டி,  என எப்போதும் துணை நின்று எப்படியோ ஓடிக் களைத்து மூன்றாண்டு முடிந்ததும் தான் உணர்ந்து கொண்டேன் வாழ்க்கை இதுவல்ல என!

மூன்றாண்டு முடிந்த மாத்திரத்திலேயே என்னை தழுவிய சூழல், House Managementஐ தலை மேல் ஏற்றியிருந்தது! ஆயிரம் பிரச்சினைகளை சமாளிக்க வேண்டியிருந்தது, குழந்தையாகவே இருந்த என்னை கொஞ்சம் மனமுதிர்ச்சியோடு சிந்திக்க சொன்னது!

குட்டி டானாய் கல்லூரிக்குள் ஆட்டம் போட்டதெல்லாம் குடும்ப சூழலுக்குள் ஒத்துப்போகவில்லை, சிட்டி நாகரிகத் தாக்கத்தால் கிராமத்து கலாச்சாரத்துள் சிக்கித் திக்கி திணறிப்போனேன்!

இப்போதும் திணறல் இருக்கத்தான் செய்கிறது சில கவனகுறைவுகள் என்னை பொறுப்பற்றவளாக்கிவிடுகின்றன, சில கோப வார்த்தைகளுக்குள் நான் கெட்டவள் ஆகிவிடுகிறேன், மனக்கட்டுப்பாட்டின் கருவை உணர்வதற்குள்ளேயே இந்த இருபத்தோரு வயதுக்கு ஏற்றவளாய் நான் முதிர்ந்திருக்கவில்லை என உணர்ந்து கொண்டேன்.

கொஞ்சம் சுற்றம், நட்பு வட்டம் என பெரியோரோடு பேசி பழகி இருக்கலாம் நான்! ஹிம் இதெல்லாம் கரி வைரமாவதற்கு தீட்டப்படும் ஆரம்பக்கட்ட பட்டைதீட்டல்தான் இன்னமும் எத்தனையோ நிலைகளை நான் கடந்தாக வேண்டும்!

இருக்கும் ஐநூறு ரூபாய்க்குள் மாதத்தின் கடைசி மூன்று நாட்களை நடத்துவது எப்படி, ஒரு கரண்டி மாவில் இரண்டு தோசை வார்த்தெடுப்பது எப்படி, ஒன்றை பத்தாக்கி உறவுக்குள் பகிரும் உறவை மனம் நோகாமல் தவிர்ப்பது எப்படி என எத்தனையோ!

என் வாழ்க்கையையே புரட்டிப்போட்ட  இந்த கடைசி இடம் மாற்றம், வெட்டப்பட்டதாய் நான் நினைத்துக்கொண்ட என் சிறகை மன முதிர்வோடு களைந்திருக்கிறது என எண்ணிக்கொள்கிறேன் இப்போதெல்லாம்!

கொஞ்சம் கவிதை, வீட்டு வேலை, கற்பனை, புன்னகை, கேலி இதைத்தாண்டி சமாளிப்பை, பொறுப்பை, தேவையை, உணர்த்தியிருக்கிறது வாழ்க்கை! படித்து வேலை பார்த்து வெளி உலகை சமாளித்து வாழ்ந்து காட்டுவதே பெரிய சாதனை என எண்ணிக்கொண்டிருந்த என்னை தனக்குள் நுழைத்து, என் வெறுப்பை சம்பாதித்து என்னை எரிச்சலாக்கி, தனிமைப்படுத்தி, தலைக்குமேல் வெள்ளம் என்ற நிலைதான் எனக்கு நிலைக்கும் என வாழ்க்கை மீதே வெறுப்பை வளர்த்துக்கொண்டு இருந்த என்னை மெல்ல தன்னுள் இட்டுச் சென்று இதற்குள் இருக்கும் உலகின் அழகை, அடுத்தோரை கவனிப்பதின் பலனாய், அன்பின் பலனாய், கிட்டும் மனநிம்மதியை, ஒரு குடும்பத் தலைவித்தனத்தை எதையோ என்னுள் விதைத்திருக்கிறது. வெள்ளமல்ல காற்றைத்தான் வெள்ளமாக்கி வாழ்ந்திருக்கிறேன் இத்தனை நாளும்!

(பி.கு: எந்த சூழலுள்ளும் நம்மை நுழைத்துக் கொள்வதைவிட, விரும்பி நுழைவது சிறப்பன்றோ)

1 comment:

  1. ஆறு மாதங்களில் நல்ல சூழ்நிலையை உணர்ந்து இருக்கலாம் ஆனால் இது இந்த உலகின் நிஜம் அல்ல...உங்களுக்கு என்னை நான்கு தெரியும் வந்த சில நாட்கள் முதல் பல மாதங்கள் நாம் இடையே பாலோவிங் இருந்ததுபின் அது மறைந்தது ....வேகமாக பறக்கும் பறவையின் சிறகுகள் என்றும் உடையாது எழுந்து வாருங்கள் முகத்திரை கிழித்து காட்டப்படும்

    ReplyDelete