Tuesday, June 4, 2013

நான் வளர்கிறேனே மம்மி!

வயதின் பருவ மாற்றங்களின் உள்ளத்து உணர்வுகளை கொஞ்சம் வெளிக்கொணரலாம் என்றிருக்கிறேன்!

சமீபத்தில் நான் படித்த ஒரு Self Analysis பதிவுதான் என்னை 'நான் வளர்கிறேனே மம்மி! ' எனும் இப்பதிவை எழுதத்தூண்டியது.

அம்மாவின் விரல் பிடித்தபடி அப்பாவின் தோள் அரியணையில் அமர்ந்து அண்ணனோடு சண்டையிட்டபடி கழிந்த நாட்களை, தம்பியின் தலையை பிடித்து உலுக்கி, அடித்து, உருண்டு புரண்ட சண்டைகளை எப்போதுமே நான் யோசித்ததில்லை இப்போதுவரை.



இரண்டாம் வகுப்பில் எல்லோரும் "சம்ர்த்து" எனக்கொண்டாடி என்னை தலைக்கனத்துக்குள்ளாக்கியதை பின் நாட்களில் நினைத்ததே இல்லை நான்!

வீதியில் தட்டான் பிடித்து தகரப்பெட்டிக்குள் அடைத்து பின் ஒருசேர பறக்கவிட்டு மகிழ்ந்தமை, அண்ணனோடு எல்லா விளையாட்டிலும் உப்புக்கு சப்பானியாய் ஓடி ஆடியமை, தரையை மாணாக்கராக்கி  "ஏய் ஒழுங்கா எழுது" என கற்பனையில் என்னை டீச்சராக்கிக்கொண்டமை என எதையுமே பின் நாட்களில் தொடர முடிந்ததில்லை.

மூன்றாம் வகுப்பிலேயே கொஞ்சம் பெரியவள் என உணர்ந்துவிட்டேன், ஒரு எலும்பு முறிவினால் வீட்டுக்குள் அடைப்பட்டுக் கிடந்தபோது. பின் அண்ணனும் அவன் படிப்பு என சிரத்தையெடுக்க போய்விட்டான் நானும் டிவியை, புத்தகங்களைக்(சுட்டி விகடன் ;)) ) கட்டிக்கொண்டேன்.

இப்படியே பால்யம் கழித்து பின் இன்னமும் தனிமையடைய வைத்த என் இன்னுமொரு பயணத்தின் பயனாய் எதை இழந்தேன் என இதுவரை யோசித்ததில்லை நான்.

எதையோ இழந்திருக்கிறேன் என எண்ணிக்கொள்வதில் இப்போது லாபமில்லை என உணர்ந்தபின்னர் கொஞ்சம் சிந்தைக்குள் ஆழ்கையில் எதை சாதித்திருக்கிறேன் என ஒரு எண்ணம் மட்டும் நெஞ்சுக் கூட்டுக்குள் என்னை சலிப்படையச் செய்கிறது! எதற்காக இப்படி இந்த வயது வருடத்துக்கு ஒருமுறை அதிகரித்துக்கொண்டிருக்கிறது :(

ஆம், எதை சாதித்து விட்டேன் நான்! எல்லா குழந்தைகளுமே வளர்கையிலேயே எதை எதையோ படித்து எல்லா துறையிலும் எதையோ அறிந்து வைத்து கொள்கிறோம், பட்டம் என ஒன்றை பெற்றதன் பின்னர், வேலை சம்பளம் என ஓடத் துவங்கிவிடுகிறோம்.

என்னையும் சேர்த்து,
குழந்தையாய் இருக்கையில் விரல் பிடித்து அலைந்ததைப்போல் பின் எப்போதாவது அலைந்திருப்போமா! சாலையைக் கடக்க உதவ முனையும் தாயின் கைவிரலை தட்டிவிட்டு விடும்மா, எனக்கு தெரியும் ரோட் கிராஸ் பண்ண என எளிதாய் சொல்லி வளர்ந்து அந்த அரவணைப்பை இழந்து விடுகிறோம், அது தவறில்லை, அந்த வயதிற்கான முதிர்ச்சிதான், அந்த அரவணைப்பை இழப்பதைக்கூட அப்பாவும், அம்மாவும் பெருமிதமாய் நம்மை புகழ்ந்து வைப்பார்கள் எல்லோரிடமும்.

 வயதின் முதிர்ச்சியைப்போல் மனதும் வளர்ந்து நம்மை முதிர வைக்க ஓடத் துவங்கி விடுகிறோம். படிப்பில் தொடங்கி, பின் வேலை, சம்பாதிப்பது, சேர்த்து வைப்பது எனத் தொடங்கி திருமணச் சடங்கில், குழந்தையில் தனியறைக்கு இடம்பெயர்ந்ததைப்போல் வேறோர் குடும்பத்திற்குள் இடம் பெயர்ந்துவிடுகிறோம். எதை இழக்கிறோம் இதில்?! எதை சாதித்திருக்கிறோம் மன அளவில்?! எல்லோருக்குமே கிடைப்பதில்லை, என் தாயும் தந்தையும் மனநிறைவோடு வாழ்கிறார்கள் என்ற திருப்தி! அது பணத்தால் கிடைக்கத்தான் ஓடுவோம், மனதால்.................! எனக்குப் புரிகிறது, இதுதான் பரிணாம வளர்ச்சி என, ஆனாலும்,?!



நாம் வளர வளர வளரும்  தாயும் தந்தையும் அவர்களும் நமக்கானதை தேர்ந்தெடுப்பதில் சிரத்தை காட்டி, பின் வயோதிகத்தில் தனிமையில் குழந்தையாகிவிடுகிறார்கள்! பிசினஸ், ஆஃபிஸ், கணவர், குழந்தைகள் என கவனிக்கும் பொறுப்பு நமக்கு கூடுகையில் வயதும் ஒவ்வொரு படியாய் மேலேறுகையில் நாம் நம்மைப் பற்றி யோசிக்கிறோம். ம்மா, இதும்மா, ப்பா அதுப்பா என எல்லாவற்றிலும் ஆலோசனை கேட்போர் கூட மழலையில் மடியிலமர்த்து நிலவை கைப்பிடித்து நமக்காக இட்டுவந்து பால்சோறு ஊட்டிய அப்பா, அம்மாவுக்காக நம் நேரத்தில் கொஞ்சத்தை செலவிடுகிறோமா! மாமியாரோ, மாமனாரோ அம்மா, அப்பாவாக தன் உறவை நம் மனதுள் மாற்றிக் கொள்கிறார்களா?!



அம்மா, அப்பாவோடு மாடியில் நிலாச்சோறுண்ணும் நாள் எத்தனை கிடைக்கிறது நமக்கு? கணவன், மனைவி, குழந்தைகள் எனப் புது உறவுகள் நம் வாழ்க்கைக்குள் வந்தபின்னும், தோளுரசி, முன்னுச்சி முத்தத்திற்கு ஏங்கி என எத்தனை பால்ய மன நிறைவுகள், இனம் புரியாத சின்ன சின்ன சந்தோசங்களுள் எத்தனை கிடைக்கிறது நமக்கு?! எல்லா புது உறவுகள் நமக்கிடையில் புகும்போதும் நமக்குள் எழும் எத்தனை கற்பனைக் கோட்டைகள் நிறைவேறுகின்றன, நிறைவேற்றுகின்றோம் ?!
நான் வளர்ந்தேன், வளர்கிறேன் ஆனால் அம்மா, அப்பாவிற்கு நான் கொடுத்த இனபம் துன்பத்தின் அளவைக்காட்டிலும் பெரிதுதானா, என்ற கேள்விகள் மட்டும் என்னுள்ளே!

-பிதற்றுவேன்!

2 comments:

  1. Growing pains are there for each one of us and as a result parents feel two kinds of pain. 1. The pain that we feel which also hurts them 2. and the pain we inflict on them due to generation gap.

    similarly 1. they enjoy our achievements with pride and 2. they also feel happy at their sense of accomplishment when they feel that they have done their duty to their satisfaction.

    Parenthood is a rollercoaster ride :-)

    amas32

    ReplyDelete