Sunday, July 7, 2013

இந்த பாழாய்ப்போன ஜன்னல்!

என் கோபத்தின் மிச்சத்தை
உலகின்மேல் உமிழ உதவுகிறது
இந்த பாழாய்ப்போன ஜன்னல்!

ஒவ்வொரு பார்வைக்கும்
உலகை நிறம் மாற்றித் தொலைக்கிறது
இந்த பாழாய்ப்போன ஜன்னல்!

தனிமையில்
என்னோடு நட்பாகி
வேடிக்கைக் காட்டுகிறது
இந்த பாழாய்ப்போன ஜன்னல்!

சமயத்தில் மழலையாக்கி
உலகை ரசிக்கத் தருகிறது
இந்த பாழாய்ப்போன ஜன்னல்!


நிலவை இட்டுவருகிறது
நட்சத்திரங்களை முத்தமிடச்செய்கிறது
மழை காட்டுகிறது
மண் சுவைக்கக் கொடுக்கிறது
தென்றலோடு காதல் செய்விக்கிறது
இந்த பாழாய்ப்போன ஜன்னல்!

தெருவில் திரியும் விடலையின்
மாமிசப் பார்வைக்கு
என்னைக் காளியாக்கிவிடுகிறது
இந்த பாழாய்ப்போன ஜன்னல்!

எதிர் வீட்டு ஆடவனின்
காதல் பார்வைக்கு
நாணச் செய்கிறது
இந்த பாழாய்ப்போன ஜன்னல்!

நோட்டமிடும் மனிதர் முகத்தில்
 அறையாமல் அறைய 
 கை கொடுக்கிறது
 இந்த பாழாய்ப்போன ஜன்னல்!

வானம் மண்ணை முத்தமிட அனுப்பும்
மழைச் சாரலையெல்லாம்
சிறைப்பிடித்து நீர்க்குமிழியாக்குகிறது
இந்த பாழாய்ப்போன ஜன்னல்!



தன் எஜமானனின் உணர்வுக்கேற்றபடி
உலகை மாற்றிக்காட்டி விடுகிறது
இந்த பாழாய்ப்போன ஜன்னல்!

எந்தப் பொழுதாயினும்
வெளிச்சமோ
வெக்கையோ
தென்றலோ
புழுதியோ
என் அறைக்குள் அனுப்பிக்கொண்டே இருக்கிறது
இந்த பாழாய்ப்போன ஜன்னல்!

என் அறை மூளையில்
நான்குக்கு மூன்றாய் சுவரோடு பதிந்து
என்னை உளவு பார்த்தபடி
உலகத்தினுள் என்னை தொலைக்க உதவியடி
என் மன ரகசியங்கள் அனைத்தையும்
படித்துத் தொலைத்திருக்கிறது!
இந்த பாழாய்ப்போன ஜன்னல்!






6 comments:

  1. மாமிசப்பார்வை... இந்தமாதிரியான வார்த்தையெல்லாம் எங்கிருந்து புடிக்குற...;)

    ReplyDelete
    Replies
    1. மூளைக்குள்ள இருந்து அவ்வ் :)) thanks :))

      Delete
  2. தெருவில் திரியும் விடலையின்
    மாமிசப் பார்வைக்கு
    என்னைக் காளியாக்கிவிடுகிறது
    இந்த பாழாய்ப்போன ஜன்னல்!
    எதிர் வீட்டு ஆடவனின்
    காதல் பார்வைக்கு
    நாணச் செய்கிறது
    #ஏமாளி,கோமாளி

    ReplyDelete
  3. வெளியில் சென்ற தந்தைக்கான
    அம்மாவின் தேடலைக் காட்டுகிறது
    இந்த பாழாய்ப்போன ஜன்னல்!

    என் அகக்குப்பை,புறக்குப்பை
    இரண்டும் உள்வாங்கும் கருவியாய்,
    இந்த பாழாய்ப்போன ஜன்னல்!

    சில சமயம் என் இதயம் மூடும்பொழுது
    தானும் மூடி, என் படபடப்பில்
    தானும் படபடத்து, என் நண்பனாய்
    இந்த பாழாய்ப்போன ஜன்னல்!

    சூப்பர் நறு... :-)) நீ கலக்கு... :-))

    ReplyDelete
  4. பிரமாதம், பொறாமையின் உச்சத்தில் நின்று வாழ்த்துகிறேன்!!! "மாமிசப் பார்வை" புதுசா இருக்கு!!!

    ReplyDelete