Monday, February 4, 2013

என் கற்பனைக் காத(லன்)ல்....

என் தோழியோடான ஆனந்த சந்திப்பில் எங்களுக்குள் ஓர் வாக்குவாதம்,பெண் கவிதையாக்கப் படுவது போல்,ஆணை கவிதையாக்குவதில்லை என...

அவளோடான சவாலில் வெற்றிப்பெற இந்த கிறுக்கலைப் படைத்திருக்கிறேன்....இது சரியான கவிதை நடை தானா, எழுத்துப்பிழை,ஒற்றுப்பிழை மிகுந்ததா என்றெல்லாம் எனக்கு கவலை இல்லை...

சவாலில் வெற்றி பெற்றேன்,அவ்வளவே!!!

இதோ என் படைப்பு...படித்துப் பின் எழுத்துப்பிழை,ஒற்றுப்பிழைகளைப் பகிரவும்....

நன்றி!!!

♥  உன் வெட்டும் பார்வையில்
    வெட்டப்பட்டேன்
    நீ
    வெற்றிப் பார்வை கொண்டாய்!

♥  உன் விழியிடுக்கில்
     ஒளி வளர்த்த புன்னகையில்
     குறும்பு மின்னல் தாண்டவம் ஆடுகிறது!

♥  நீ
   கர்வம் பிடித்தவன்
   நான் பறித்தபின்னும் இதயத்தை
   தேடாமல் இருக்கிறாய்!


♥ உன் திமிரில்
   தொலைந்த என் பார்வைச் சங்கிலியில்
   என் காதலை உணர்ந்தும்
   உணராமல் நடிக்கிறாய்!

♥ நான் தோற்றுத்தான் போனேன்
   என்
  துன்பக் கண்ணசைவில்
  தும்பைப்பூ பளீர் புன்னகை வீசினாய்!

♥ நான்
  தொலைந்து போனேன்
  உழைத்து களைத்த உன் குழந்தை முகம் கண்டு
  அன்னையாய் அரவணைக்க ஆற்றலின்றி!

♥ நீ
   விரல் நீட்டி கோபமுகம்
   காட்டினாய்
  அந்த யாராகவோ என்னை நினைத்து மருண்டேன்,
  உன் சூரியக் கொதிப்பில்!

♥ நாம் காதல்தான் புரிகிறோம்
   மெளனக்காதல்
   அகந்தையில் நீயும்
   நாணத்தில் நானும்
   மறைத்தே வைத்திருக்கிறோம்!

♥ ஏனடா அன்றொருமுறை என்னை தோழி என்றழைத்தாய்
   நிசியின் இருட்டுக்குள்
   என் இதயம் வேலை நிறுத்தம் செய்கிறது
   இதே நினைவில்.



♥  சொல்லாமல் என் தந்தையிடம் நட்பு வளர்த்துக் கொண்டாய்,
    வதுவை முறைகளை எண்ணித்தானோ!!

♥  இப்போதே உன் பார்வை வேண்டும்
    என் இதயம் உன்னைச் சித்திரம் வடிக்கக் கேட்கிறது!

♥  உன் காதல் கடிதமொன்றை படித்தேன்
    கடிதமெல்லாம் என் பெயர் தான்
    ஆங்காங்கே அன்பும்,ஆருயிரும்
    வழிந்தோடியது!

♥  வேண்டாமடா!!
     உன்னை கவி வளர்க்கச் சொன்னால் நான் காவியம்
    வரைவேன்
   என் காவியத் தலைவன் நீ!

♥ வா நாமும் காதல் வளர்ப்போம்
   சொல்லாக் காதல்!

♥ உன்னை ஷாஜஹானாக்க விருப்பமில்லை
   நான் அந்தப்புரத்திலொரு ராணியாவேன்!
   உன்னை ராமனாக்க பிரியமில்லை
   நானும் வனத்தில் வாசம் செய்வேன்!

♥ ஒப்புமையில்லாமல்
   நாம் இன்னொரு எடுத்துக் காட்டாவோம்!

♥ அனைத்து உறவுமாய்
   எனக்கு நீ
   உனக்கு நான்!!!



12 comments:

  1. அமீரா, அருமையான கவிதை, எனக்கு புரிந்தது, பிடித்தது, ரசித்தேன்

    ReplyDelete
  2. .. #கவிதை அழகு

    ReplyDelete
  3. நல்லா இருக்கு... கற்பனை காதலன் மாதிரி தெரியல

    ReplyDelete
  4. நீ கர்வம் பிடித்தவன் நான் பறித்தபின்னும் இதயத்தை தேடாமல் இருக்கிறாய்! --- அருமை

    ReplyDelete
  5. நீ கர்வம் பிடித்தவன் நான் பறித்தபின்னும் இதயத்தை தேடாமல் இருக்கிறாய்! செம

    ReplyDelete