Wednesday, August 7, 2013

ஹலோ மை டியர் ராங் நம்பர் ;)

பலருக்கு தம் 24 மணி நேரத்தின் பெரும்பான்மையை இப்போதெல்லாம் குடித்துக்கொண்டிருப்பது அலைப்பேசிதான். 

குறுஞ்செய்தி எனவும், அழைப்புகள் எனவும் நம்மைவிட்டு விலகி இருப்பவர்களிடம் நம்மை நெருங்க வைக்கும் இந்த குட்டி சாதனம் பல நேரங்களில் குட்டிச்சாத்தானாக மாறிவிடுகிறது.  இந்த குட்டி சாதனத்தினால் எனக்கும் என்னைச் சுற்றி உள்ள தோழியருக்கும் நடந்த இரு நிகழ்வுகளை பகிர விழைகிறேன்.

அன்றொரு முறை தோழியரோடு வெளியே சென்றிருந்தேன், என் தோழிக்கு அழைப்பு வந்த வண்ணம் இருந்தது. எடுத்துதான் பேசேண்டி என்றேன்,
அடிப்போடி காலைலேந்து இது எட்டாவது கால், எத்தனை முறை சொன்னாலும் ராகவன கூப்பிடும்மாங்குறாங்க ராங் நம்பர்ன்னு புரிஞ்சிக்கவே மாட்டேங்கிறாங்க, நான் பொய் சொல்றேங்குற மாதிரி வேற பேசுறாங்கடி என்றாள். 
என் நட்பினர் வட்டம் குறும்புகளுக்காகவே பிறப்பெடுத்தது, இதைக்கேட்டதுமே அந்த அழைப்பை அடுத்த முறை கலாய்க்கனும் என ஒரு மனதாக முடிவு செய்திருந்தோம்.. 
பாவம் யாரோ அப்பாவி பெண் போலும்
பெண்: ஹலோ ராகவன் இருக்கானா?!
தோழி: அவரு டூட்டிக்கு போயிருக்காருங்க.
பெண்: என்ன டூட்டி?
தோழி: இளாவையும் அமுதனையும் கண்டுபிடிச்சு ஆராதனாவை காப்பாத்துற டூட்டி.
பெண்: இதுக்கு முன்னாடி ராகவன் இல்லை, ராங் நம்பர்னு சொன்னாங்களே?!
தோழி: சொல்லியும் ஏங்க போன் பண்ணுறீங்க?!
பெண்: அவரு நம்பருன்னு இதத்தானே குடுத்தாங்க! இப்போக்கூட டூட்டிக்கு போயிருக்காங்கன்னிங்களே?
தோழி: ஏங்க அது வேட்டையாடு விளையாடு படக்கதைங்க. நாங்க தவறுன்னு சொன்னதும் நீங்க கேக்கல, நெஜமாவே இது ராங் நம்பர்தாங்க புரிஞ்சிக்கங்க!
பெண்: நீங்க பொய் சொல்றீங்க நான் நம்பமாட்டேன், ராகவன் கிட்ட போன குடுங்க!
தோழி: உங்கள பாத்தா பாவமா இருக்குங்க, புரிஞ்சிக்கங்க இது ராகவன் நம்பர் இல்லை.
பெண்: அப்ப உங்க பேரு என்ன, அதைச்சொல்லுங்க பாப்போம்!
தோழி: ம்ம் தமன்னா.
பெண்: என்னது தமன்னாவா?!
தோழி: ஆமாங்க தமன்னாதான், நடிகை தமன்னா.
பெண்:நடிகை தமன்னாவா, மேடம் எப்படி இருக்கீங்க மேடம் அய்யோ சாரி மேடம், தப்பா நம்பர் தந்துட்டாங்க போல மேடம். மேடம் பேசுங்க மேடம்.
தோழி:நான் ஷூட்டிங்ல இருக்கேன் அப்புறம் பேசுங்க.
பெண்: அலோ தமன்னா மேடம்?
தோழி:பாருங்க, என் அசிஸ்டெண்ட் நம்பர் இது, ஏன் இப்படி தொந்தரவு பண்றீங்க?
பெண்: சாரிங்க மேடம் இனிமே பண்ணல மேடம். எங்க வீட்ல எல்லாரும் உங்க ஃபேனுங்க மேடம், அய்யோ உங்ககிட்ட பேச்சிட்டனே பேசிட்டனே, ராகவன் என் ஃப்ரெண்டு மேடம், சின்ன சண்டை நம்பர் மாத்திட்டான், அவன் நம்பர்னு இதைத்தான் குடுத்தாங்க அதான் சாரிங்க மேடம் எங்கூடல்லாம் பேசிட்டீங்களே தாங்க்ஸ் மேடம்.
நான்: ஏங்க எந்த ஊர்லங்க இருக்கீங்க, முதல்ல புரிஞ்சிக்கங்க நான் தமன்னாவும் இல்லை, இது ராகவன் நம்பரும் இல்லை. நீங்க தவறான நம்பருக்கு கால் பண்ணி இருக்கீங்க. முதல்ல ராகவன் நம்பர்ன்னு இதைக்குடுத்தவனபோயி உதைங்க.தொல்லை செய்யாதீங்க. செஞ்சா எங்கப்பா போலீஸ், அவர்கிட்ட புடிச்சு குடுத்துருவேன்.

நல்லவேளை இதற்குமேல் அந்த பெண் பேசவில்லை. 

இதேபோல் என் அலைப்பேசி எண் வாங்கிய புதிதில் அடிக்கடி ராங் கால்கள் வரும் அலோ சக்தி இருக்காரா? என்றபடி,  எத்தனை முறை சொன்னாலும் அந்த ஆண்கள் ஒத்துக்கொள்ளவே மாட்டார்கள். 

பின்னாளில் வந்த அழைப்பில் அந்த சக்தியே பேசினார் 
அலோ யாருங்க நீங்க?
அதை நான் கேக்கனும்ங்க. யார் நீங்க?
இது யார் நம்பர்.
அடக்கடவுளே! யாருங்க நீங்க? எனக்கு கால் பண்ணிட்டு யாருன்னும் சொல்லாம... என் நேரத்தை வீணடிக்காதீங்க, நீங்க யார்ன்னு சொல்லுங்க?!
நான் சக்தி, இது நான் உபயோகிச்ச நம்பர், பஸ்ல தொலைஞ்சு போச்சு, இப்போ நீங்க வெச்சிருக்கீங்க?!
இது கம்பெனிக்காரங்க புதுசுன்னு குடுத்த நம்பருங்க, நீங்க உபயோகிச்சதுன்னா நான் என்னங்க செய்ய முடியும்?
அதெப்படிங்க என் பழைய நம்பர் உங்களுக்கு கெடைச்சிது?
அய்யைய்யே! கம்பெணிக்காரங்கதாங்க புதூஊஊஊ நம்பர்ன்னு குடுத்தாங்க கேக்குறதுன்னா அவங்கள கேளுங்க!
அதெப்படிங்க என் நம்பரை புதுசுன்னு உங்களுக்கு குடுப்பாங்க?
அதை என்னை ஏங்க கேக்கறீங்க? போய் கம்பெனிக்காரங்கள கேளுங்க,  நம்பர் வாங்கின ரசீது இருக்கு எங்கிட்ட.
ஓ! சாரிங்க நாந்தான் தவறா நெனச்சுட்டேன்.

இப்படியாக ஏற்கனவே யாரோ உபயோகித்து சஸ்பெண்டான நம்பர்களை இந்த கம்பெணிக்காரர்கள் நம் தலையில் கட்டிவிடுகிறார்கள். விளைவு இப்படியான சின்னச்சின்ன தொல்லைகளை எல்லாம் சந்திக்க நேர்கிறது.
சில நேரங்களில் வேறு சில பெருந்தொல்லைகளுக்கும் ஆளாக நேரிடுகிறது. அழைப்போர் புரிந்துகொண்டாலன்றி இது போன்ற தொல்லைகள் நிற்காது!

பிதற்றுவேன்,
எச்சரிக்கைகளுடன்,
நறுமுகை ;) 


2 comments:

  1. படிக்கையில் எளிமையாகவும், "Refreshing" ஆகவும் இருந்தது. அழகு!!!

    தொடர்ந்து எழுதுங்கள், 'எழுத்தாளினி' நறுமகை!! :-))

    ReplyDelete